தொகுதி மறுவரையறை! அவசரமா? அவசியமா?
தொகுதி மறுவரையறை! அவசரமா? அவசியமா?
தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முஸ்லிம்களின் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்வுகளில் பங்கெடுக்கும் காட்சி மகிழ்ச்சி அளிக்கிறது.
குறிப்பாக கடந்த 21 வருடங்களாக விசிக தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் ரமழான் நோன்பு நோற்கிறார். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், தாவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.
தமிழகம் என்றுமே சகோதரத்துவமும் மதசகிப்புத் தன்மையும் கொண்ட அமைதிப் பூங்காதான் என்பதை இத்தகைய நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்வுகள் உணர்த்துகிறது. அனைவருக்கும் நன்றிகளும், புரட்சிகர வாழ்த்துக்களும்.
தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவின் நிலையும் இதுதான். இதுதான் இறையாண்மையும் சமதர்மமும் வாய்ந்த, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்ற நம் முன்னோர்கள் கனவு கண்ட இந்தியா. அத்தகைய ஒற்றுமை உணர்வில் பங்கம் விளைவிப்பது போல, ஒன்றிய பாஜக அரசு முன்மொழியும் வக்ஃபு வாரியத் திருத்தச் சட்டம், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் போன்றவை தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது.
மறுபுறம் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்று வரையறுத்து, மும்மொழிக் கொள்கையை நிறுவி, அதன் மூலம் இந்திமொழி பேசப்படாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்க முயல்கிறது ஒன்றிய அரசு. குறிப்பாக ஒன்றிய பாஜக அரசின் முன்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொண்டால்தான் சுமார் 2150 கோடி ரூபாய் கல்விக்கான நிதியை தருவார்களாம்.
மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்ய உள்ளோம் என்றும் ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தொகை எண்ணிக்கை சதவிகித அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். அதே வேளையில் பசு வளைய (கவ் பெல்ட்) மாநிலங்களாகக் கருதப்படும் உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருமளவு உயரும்.
தற்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு மறுவரையறைக்குப் பின்னர் எட்டு தொகுதிகளை இழக்க நேரிடும். இந்திய அரசின் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் தண்டனையா இது? என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பினார்.
மக்கள் தொகை எண்ணிக்கை சதிவிகிதத்தை வைத்து நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரை செய்ய வேண்டுமெனில் நாடளவில் முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பிறகு பெருகி வரும் இந்திய மக்கள் தொகையானது மாநிலங்கள் தோரும் அதன் விகிதாச்சார ஒப்பீட்டளவில் சமநிலையை அடைந்துள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதை கருத்தில் கொண்டே கடந்த 1976 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவர்களும், கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் 25 ஆண்டுகளுக்கு மறுவரையறையை தள்ளிப் போட்டனர். இப்போது என்ன அதீத வேட்கை? என்ன அவசரம்? நூற்றாண்டுகளைக் கடந்தும் அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கையில் எந்தக் குழப்பங்களும் இல்லையே!
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், ‘புரோ ரேட்டா’ அடிப்படையில் தொகுதி மறுவரை செய்ய உள்ளோம். இதனால் தமிழ்நாட்டுக்கு ஒரு தொகுதி கூட குறையாது என்று வாக்குறுதி தருகிறார். ஒரு ஜோடி புரோட்டா இருந்தால் எங்கள் பசி ஆறிவிடும் என்ற நிலையில் பல கோடி ஏழைகள் வாழும் நாடு இந்தியா. சங்கித்துவத்தைவிட சாப்பாடுதான் முக்கியம். எனவே முதலில் ஏழைகளின் பசியைப் போக்கிட திரு அமித்ஷா தீர்வைச் சொல்லட்டும். பணமதிப்பிழப்பு மூலம் கறுப்புப் பணத்தை மீட்டித் தந்த மோடிஜியின் வாக்குறுதியை பார்த்தோமே.
அது என்ன புரோ ரேட்டா? கல்வி, மருத்துவம், தொழில்துறை ஆகிய துறைகளில் முன்னோடிகள் நாம். இந்தியாவின் வளர்ச்சியில் (ஜிடிபி) பெரும் பங்கெடுத்து வரி செலுத்தும் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதும் நாம்தான். எனவே இவற்றை பாராட்டி எங்களுக்கு உள்ள அளவைவிட அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்று கோருவதே நியாயம். இவ்வாறு நியாயத்தை பேசும் நம்மை நகர்புற நக்சல்கள் என்று கோடிமீடியாக்கள் விமர்சிப்பது ஏனோ?
இது ஒருபுறம் இருக்கட்டும், இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழும் காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தின் தொகுதிகளை கடந்த 2022 ஆம் ஆண்டு எந்த லட்சணத்தில் மறுவரையறை செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாதா? கடந்த 2023 இல் அஸ்ஸாம் மாநிலத்தில், மறுவரையறை ஆணையமும், பாஜகவும் திட்டமிட்டு நடத்திய முறைகேடுகளால் அங்குள்ள முஸ்லிம்கள், மலைவால் மக்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் தொகுதிகளை பிரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில்?
குறிப்பிட்ட அளவுகோலை வைத்து புரோரேட்டா எனும் விகிதாச்சார அடிப்படையில் மறுவரையறை செய்ய முடியுமாம். அப்படி வரையறை செய்தாலும் புதிதாக அமையும் அத்தொகுதிகளில், பட்டியலின சமூகம் மற்றும் பெண்களுக்கான தனித் (ரிசர்வ்) தொகுதிகளின் நிலை என்ன?. இது குறித்து அனைத்து கட்சித் தலைவர்களோடும், மறுவரையறை துறை சார்ந்த நிபுணர்களோடும் ஒன்றிய அரசு இதுவரை ஒரு கலந்தாய்வு கூட்டத்தையாவது நடத்தியது உண்டா?
பிரதமர் மோடியின் அன்புச் சகோதரியும், உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும், உத்தரகாண்டில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பொதுச்சிவில் சட்ட வரைவை தயாரித்தவருமான திருமதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் போன்றவர்கள் தொகுதி மறுவரையறை ஆணையத்தில் முக்கியப் பங்காற்றும் போது நாட்டு மக்களுக்கு எத்தகைய நியாயமான தீர்வுகள் கிடைக்கும்? என்பது மில்லியன் டாலர் கேள்வி!
இவற்றை உள்வாங்கிய நிலையில்தான், தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாட்டின் சர்வ கட்சிகளையும் ஒருங்கிணைத்தார். அதன் காரணமாக ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறையை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோடி சர்க்கார் அதி தீவிரம் காட்டும் மேற்படி தொகுதி மறுவரையறை நாட்டுக்கு அவசரமா? அல்லது அவசியமா? என அனைவரும் வினா எழுப்புகின்றனர். நாடளவில் இதுகுறித்த கூட்டு நடவடிக்கை தேவை என்று பிற மாநில முதல்வர்களுக்கு நம் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டி தமிழக முதல்வர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனதார வரவேற்கிறது. ஒன்றுபட்டு ஒருமித்த குரலில் தமிழகம் திரண்டு எழுந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
வழக்கறிஞர் எம்.என். அகமது சாகிபு (விசிக)