கலவரம் தடுப்போம் கருத்தியல் படைப்போம்..!! கல்லறை அரசியல் அடியோடு தவிர்ப்போம்..!!

கலவரம் தடுப்போம் கருத்தியல் படைப்போம்..!! கல்லறை அரசியல் அடியோடு தவிர்ப்போம்..!!

இறைவனைப் புகழ்ந்து, எளியோருக்கு உணவளித்து, சமய நல்லிணக்கம் பேணி, சகோதரத்துவம் நிலைத்திட, சமூக ஒற்றுமை தழைத்தோங்க சூளுரைக்கும் ரம்ஜான் என்னும் ஈகைப் பெருநாள் வந்து விட்டது. ஒரு மாத காலம் நோன்பிருந்து உலக அமைதிக்காக பிராத்தித்த அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

உலக அளவில் சாந்தியும், சமாதானமும் ஏற்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். இருப்பினும் மனிதப் படுகொலைகளும், குண்டு வீச்சுகளும் முடிந்த பாடில்லை. மனித உயிர்களின் மதிப்பு மலிவாகி விட்டது. சல்லடையாகி விட்ட பாலஸ்தீனம் காஸா இதற்கு ஓர் உதாரணம். காஸாவாசிகள் இனி இழப்பதற்கு ஏதுமில்லை. காத்திருந்து கையேந்தும் அவர்களின் உணவுத் தட்டில்கூட இஸ்ரேலின் ஏவுகணைகளே வந்து விழுகின்றன. சர்வதேச சட்டங்களும், ஒழுங்கு முறைகளும் சந்து பொந்துக்குள் பதுங்கி பல் இளிக்கிறது.

நமது தமிழ்நாட்டிலோ கபடி விளையாடிய பள்ளி மாணவரின் கைகள் வெட்டப் படுகிறது. புல்லட் ஓட்டினால்கூட கை வெட்டு என்ற முடிவுக்கு வராத ஆணவங்கள். வக்ஃபு சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஓய்வு பெற்ற காவலர் நெல்லையில் படுகொலை. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டின் நிலையே இதுவென்றால் நாக்பூரின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

முகலாய மன்னர் அவுரங்கசீப் அவர்களின் கல்லறையை அகற்றக்கோரி வி.எச்.பி, பஜ்ரங்தளம் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் கடந்த 17-03-2025 அன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் உருவப்படம் எரிக்கப்பட்டது. திருமறை குர்ஆன் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட போர்வைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக் களம் கலவரக் களமாக மாறியது. எங்கும் கல்வீச்சு, தீயெரிப்பு அதனால் 144 தடை உத்தரவு. நூற்றுக் கணக்கானோர் கைது. நாக்பூரைச் சுற்றி காவல்துறை!

காரணம் மராட்டிய திரைப்பட தயாரிப்பாளர் லச்சுமண் உடேகர் ‘சாவா’ (Chhaava) என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். அப்படத்தில் மராட்டியத்தை ஆண்ட ராஜா சத்ரபதி சம்பாஜி அவர்களை முகலாய மன்னர் அவுரங்கசீப் கொடூரமாகக் கொலை செய்ததாக காட்சி படுத்தப்பட்டன. அதுதான் கலவரத்திற்கான அச்சாரம்.

முகலாயப் பேரரசரான அவுரங்கசீப் (ஒளரங்கசீப்) இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியை சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர். அவர் 03-03-1707இல் மரணமடைந்தார். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அவரது அடக்கத்தளம் அமைந்துள்ளது. அவுரங்கசீப்; விருப்பப்படி, அவரது ‘ஆன்மீக ஆசிரியரான’ சூஃபி ஷேக் ஜைனுதீன் தர்காவிற்கு அருகில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

நம்முடைய கேள்வி, அவுரங்கசீப்பின் கல்லறையை அங்கிருந்து ஏன் அகற்ற வேண்டும்? அப்படி அகற்றி விட்டால் இந்தியப் பொருளாதாரம் சீர் பெறுமா? இந்தியா வல்லரசாகி விடுமா? கருப்புப் பணம் அனைத்தும் மீட்கப்படுமா? நீரோ மோடி, லலித் மோடி, விஜய் மல்லையாக்கள் கொள்ளை அடித்த பணம் திரும்பப் பெறப்படுமா? நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? விவசாயம் செழிக்குமா? ஊழல் இல்லாத இந்தியா உருவாகுமா? பதில் என்ன?

முஸ்லிம்கள் கடைபிடிக்கும் புனித ரமழான் நோன்புக்கு மத்தியில் அவுரங்கசீப்பின் கல்லறையை சர்ச்சையாக்கி கலவரம் செய்ததின் நோக்கம் என்ன? மதுரை சிக்கந்தர் தர்காவைப் போல, நாக்பூரில் அவுரங்கசீப் தர்காவா? முஸ்லிம் தர்காக்கள் மீது பாஜகவினருக்கு ஏன் இந்த அதீத வேட்கையோ? கடந்த காலங்களில் நெல்லி, பாகல்பூர், மீரட், மொராதாபாத், பீவண்டி, குஜராத், பம்பாய், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் ஏற்படுத்திய கலவரங்களைப் போல நாக்பூரிலும் நடைபெற்று மனித உயிர்கள் பலியாகக் கூடாது என்றே பிராத்திக்கிறோம்.

முகலாய மன்னர்களிலேயே இஸ்லாமிய மார்க்கத்தை தனது சுய வாழ்வில் பேணி பின்பற்றியவர் மன்னர் அவுரங்கசீப். அவர் ஆளுமையின் கீழ் இருந்த பல கோயில்களுக்கு மானியங்களை வழங்கி மத சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். அந்தப்புரங்களை வைத்துக் கொள்ளாத ஒழுக்கசீலர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அரசு கருவூலத்தில் குவிந்த நிதியை தனக்காக பயன்படுத்தாதவர். தனது கையால் எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகளை விற்று தனக்கான பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்து கொண்டவர். இதுதான் அவரது உண்மை வரலாறு.

இந்த உண்மை வரலாற்றை மறைத்து மராட்டிய மன்னர்களுக்கு எதிரிதான் அவுரங்கசீப் என திட்டமிட்டு பரப்பியதின் விளைவுதான் இன்றைய நாக்பூர் கலவரம். மன்னர் அவுரங்கசீப் இந்துக்களுக்கு எதிரான சிந்தனை உடையவராக இருந்திருந்தால் ராஜா ஜெய்சிங், மகாராஜா ஜஸ்வந்த் சிங், ராணா ராஜ்சிங் போன்ற இந்து மன்னர்கள் அவருக்கு பக்கபலமாக, உற்ற துணையாக எப்படி இருந்து இருப்பார்கள்?. சிந்திக்க வேண்டாமா?

AMASR Act 1958 பண்டைய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் நமது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது ஏன்? பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்களை பாதுகாக்கவும், அகழ்வாராய்ச்சிகளை ஒழுங்குபடுத்தவுமே உருவாக்கப்பட்டது. முகலாய மன்னர் அவுரங்கசீப் அவர்களின் மண்ணரையும் இச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் இடம்தானே? இதை நன்கு புரிந்து கொண்டதால்தான் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்டினவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இதில் உரிய சட்டத் திருத்தம் தேவை என்கின்றனர்.

சமாஜ்வாதி கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் அபு ஆஸ்மி அவர்கள் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதால்தான் சர்ச்சை எழுந்தது என்பது மாநில காவல்துறையின் கூற்று. அவுரங்காபாத் நகர பிரமுகரும் சிறுபான்மை ஜனநாயகக் கட்சித் தலைவருமான ஃபஹிம்கான் என்பவர் கலவரம் செய்தோர் குறித்த உரிய தரவுகளோடு காவல்துறையில் புகார் அளித்தார். மனு அளிக்கச் சென்றவரையே குற்றவாளியாக்கி அவர் மீதும் வழக்கு புனைந்துள்ளது நாக்பூர் காவல்துறை.

இந்நிலையில் ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் உள்ளிட்ட சில தேசிய பாசிச ஊடகங்கள், நாக்பூர் கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், செய்திகளை திரித்தும், வன்முறை பேச்சுக்களையும் தொடர்ந்து வெளியிட்டன. அத்தகைய ஜனநாயக விரோத போக்குகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். எதிர்கால இந்தியாவுக்கு ஏற்றம் தருவது கலவரங்களோ, மத அடிப்படை வாதங்களோ அல்ல. பாசிசவாதிகளின் கலவரத் திட்டங்களை முறியடித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை ஆகும்.

அந்தக் கடமையை அரசு நிறைவேற்றத் தவறினால், நம் இந்தியத் திருநாட்டின் சமய நல்லிணக்கம் சீர்கெடும், சகோதரத்துவம் பாழ்படும், சமூக ஒற்றுமை கேள்விக் குறியாகும். எனவே பாசிசம் விரும்பும் கலவரங்களைத் தடுப்போம். ஜனநாயகக் கருத்தியல் படைப்போம். கல்லறை அரசியல் அராஜகங்களை அடியோடு தவிர்ப்போம்.

இவண்
வழக்கறிஞர் M.N. அகமது சாகிபு M.A., L.L.B
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
நாள் : 26-03-2025

Post Your Comment

EMPOWER CHANGE, IGNITE PROGRESS JOIN THE VCK PARTY

With extensive experience serving as an active member of the VCK Party, General Secretary of the Socio Justice Council, and National GB Member of the Indian Journalist Union (IJU), Sahib has been a driving force behind numerous welfare programs and initiatives that uplift lives and promote equality. Join us in building a brighter, more inclusive future.

Copyrights © 2025 Sahib Talks | All Rights Reserved | Powered By : Jellysoft