மனிதம் மாய்க்கும் மதவெறியும், பல்லாண்டு பகையும் பாகிஸ்தான் போரும் தேவைதானா?
மனிதம் மாய்க்கும் மதவெறியும்,
பல்லாண்டு பகையும் பாகிஸ்தான் போரும் தேவைதானா?
======================
– Ahamed Sahib
https://www.facebook.com/share/164Gy8RPRe/
ஒன்றிய பாஜக அரசின் புதிய வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்ற அவையில் ஆட்சேபித்தன. இஸ்லாமியர்களின் மத உணர்வுகளில் தலையிட்டு அவர்களின் உரிமையை பறிப்பது முறைதானா? என ஜனநாயக சக்திகள் மக்கள் மன்றத்தில் முறையிட்டனர். வக்ஃபு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுத்த நிலையில், நாட்டையே புரட்டி போட்டது பெஹல்காம் தீவிரத் தாக்குதல்.
காஷ்மீரின் பெஹல்காமுக்கு சுற்றுலா சென்றோரில் 26 பேரை கடந்த 22-ஏப்ரல் அன்று காட்டுமிராண்டிகள் சிலர் அநியாயமாக சுட்டுக் கொன்றனர். அந்தக் கொடும் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒருவரை அநியாயமாகக் கொலை செய்பவன் ஒரு சமூகத்தையே கொலை செய்தவன் ஆவான் என கண்டிக்கிறது திருக்குர்ஆன்(5:32). ஆனால் ரிபப்ளிக் டிவி, டைம்ஸ்நவ் போன்ற பாசிச ஊடகங்கள் எப்போதும் போல இம்முறையும் தீவிரவாதிகளுக்கு முஸ்லிம் முலாம்பூசி இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை செவ்வனே செய்தன. தீவிரவாதிகள் சுட்டுக் கொல்வதற்கு முன் பெயரைக் கேட்டார்கள், கீழாடையை கழற்றிடச் சொன்னார்கள். எனவே அவர்களை தண்டிப்பதற்கு பாகிஸ்தான் மீது நாம் போர் தொடுப்பதே தீர்வு என்று அர்ணப் கோசுவாமி போன்றோர் அதிதீவிரமாக அவதூறு பிரச்சாரத்தை செய்கின்றனர்.
பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானோர், காயமுற்றோர் பட்டியலில் இஸ்லாமியர்களும் உள்ளனர். அங்கு பொதுமக்கள் பலரின் உயிரைக் காப்பாற்றியதால் வீரமரணம் அடைந்த குதிரை வீரர் சையது ஆதில் ஹூசைன்ஷா இஸ்லாமியர் இல்லையா? காஷ்மீர் முஸ்லிம்கள்தான் எங்களைப் பாதுகாத்து, எங்களுக்கு உணவும் அளித்தார்கள் என்று அங்கிருந்த சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சியோடு கூறிய சாட்சியங்கள் பாசிச செவிடர்களுக்கு ஒருபோதும் கேட்பதில்லை. நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயலுக்கு முஸ்லிம்களை பலிகடா ஆக்குவதும், பிறகு உண்மை வெளிவந்த பிறகு அசடு வழிவதும் பாசிச ஊடகங்களின் வாடிக்கை. கொரோனா பெருந்தொற்றை பரப்பியதே முஸ்லிம்கள்தான் என்று சொன்னவர்கள் தானே இவர்கள்!. காந்தியடிகளை கொலை செய்த கோட்ஷே, முஸ்லிம் பெயரான இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்ட வரலாறும், மலேகான் குண்டு வெடிப்புகளும் பாசிச சங்கபரிவார கோரமுகத்தை நமக்கு உணர்த்தும்.
பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்றார். நம் நாட்டின் முப்படை வீரர்களின் பாதுகாப்பையும் தாண்டி கடல், மலை, ஆகாயம் அல்லது தரைவழியாக தீவிரவாதிகள் பெஹல்காமுக்குள் உள்ளே நுழைந்தது எப்படி? எனவே இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எழுச்சித் தமிழர் தலைவர் திருமாவளவன் கோரினார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி பகிரங்கமாக பேட்டி அளித்தார். இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க முடியாத பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி விமர்சித்தார். அதன் பிறகு கடந்த 11 வருடங்களாக மோடிதான் நாட்டின் பிரதமராக உள்ளார்.
கடந்த 02-01-2016 அன்று இந்திய விமானப்படையின் பதன்கோட் விமானத்தளம் தாக்கப்பட்டது. அதில் 12 இந்திய வீரர்கள் பலியாயினர். பிறகு 18-09-2016 அன்று ஜம்மு காஷ்மீரின் ஊரி நகரிலுள்ள ராணுவப் படைத் தலைமையகம் தாக்கப்பட்டது. அதில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போதும் தேசபக்தி, இஸ்லாமிய தீவிரவாதம், பாகிஸ்தானை தாக்குவோம் என்ற தொனியில்தான் பாஜக ஆதரவு ஊடகங்கள் உரக்க கத்தின. அதன் விளைவாக 28-09-2016 அன்று பாகிஸ்தான் எல்லையில் இந்தியா துல்லியத் தாக்குதலை (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) மேற்கொண்டது. இந்தியாவின் இரும்புமனிதர் மோடி, இந்தியாவை மீட்க வந்த மீட்பர் என்று கோடி மீடியாக்கள் புகழ்ந்து தள்ளின.
நாடே குதூகளித்த வேளையில் 08-11-2016 அன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திடீரெனத் தோன்றி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் மீட்கப்படும், காஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தின் மீதான துல்லியத் தாக்குதல் (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) என்றும், ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்ளை (ஆர்கனைஸ்டு லூட்) என்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அன்றே விமர்சித்தார்.
பிறகு 14-02-2019 அன்று ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் வாகனங்களின் மீது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். இம்முறை திவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் சற்று தூக்கலாக இருந்தது. காரணம் 2019 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல். தேர்தலின்போது மோடி, அமித்ஷா பிரச்சாரங்களில் புல்வாமா தாக்குதல் ஓங்கி ஒலித்தது. இதன் காரணமாக தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களில் அபார வெற்றி பெற்றது.
மோடி சர்க்காரில் பதன்கோட், ஊரி, புல்வாமா என இராணுவ வீரர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி குறித்த எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி எந்தப் பதிலையும் அளிக்க வில்லை. ஆனால் பாஜக ஆட்சி அமைந்ததும் 05-08-2019 அன்று இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்தது. இதன் மூலம் காஷ்மீரில் நடைபெறும் பாகிஸ்தான் தீவிரவாதம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் என்று பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படக் கூறினார். ஆனால் தீவிரவாதமும், தீவிரவாதிகளும் ஒழிந்தபாடில்லை என்பதற்கு பெஹல்காம் சிறந்த சாட்சி.
பெஹல்காம் தாக்குதலுக்கு உடனடி பதிலடியாக சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்திய ஒன்றிய அரசு அறிவித்தது. மேற்படி ஒப்பந்தமானது சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்துவதற்காக கடந்த 1960இல் இந்தியா, பாகிஸ்தான் இடையில் கராச்சியில் நடைபெற்ற நீர் பகிர்வு ஒப்பந்தமாகும். இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப்கான் ஆகியோரால் உலக வங்கி அதிகாரிகள் முன்னிலையில் அப்போது கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் மூன்று கிழக்கு நதிகளான பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் ஆகியவற்றின் மீது இந்தியா ஆளுமை செலுத்துகிறது. மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகள் மீதான கட்டுப்பாடு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. ஆறுகளில் பெருகி வரும் மொத்த நீரில் அளவைப் பொறுத்து இந்தியாவும், பாகிஸ்தானும் முறையே 30, 70 சதவிகிதம் என்ற அளவில் கடந்த 65 ஆண்டுகளாக பிரச்சனையின்றி நீரை பகிர்ந்து பெறுகின்றன.
இந்நிலையில் பதிலுக்கு பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த 1972 இல் இந்திய பிரதமர் இந்திராகாந்தி, பாகிஸ்தான் ஜனாதிபதி சுல்பிகர் அலி பூட்டோ ஆகியோருக்கிடையே சிம்லாவில் கையெழுத்தானது இந்த ஒப்பந்தம். அது பாகிஸ்தான் வங்கதேசத்தை ராஜதந்திர ரீதியாக அங்கீகரிப்பதற்கும் வழி வகுத்தது. காஷ்மீர் பிரச்சினையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம், அமைதியான வழிகளில் நமது வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் கூறுகிறது. சிம்லா ஒப்பந்தம் மூலம்தான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோடு வரையறுக்கப்பட்டது. மேலும் இருதரப்பினரும் ஒருதலைப்பட்சமாக அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
சிந்துநதி, சிம்லா ஒப்பந்தங்களின் ரத்து பற்றிய அறிவிப்பானது ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம், உலக வங்கி என்று இரு நாட்டு எல்லைக் கோடுகளைத் தாண்டிய அவையில் இனி பேசப்படக் கூடும். ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்ரேல் எதிர்ப்பு அரபு நாடுகளை அணு ஆயுதமற்ற நாடுகளாக மாற்றிடத் துடிக்கும் சர்வதேச ஜியோனிஸ அரசியலில் இந்தியா சிக்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறோம். கடந்த மாதங்களில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரை சந்தித்து ரஷ்யா – உக்ரைன் போரை கைவிடச் சொன்ன பிரதமர் மோடி, தற்போது பாகிஸ்தானுடன் போர் முரசு கொட்டுவது நகைமுரண் அல்லாமல் வேறென்ன? போரின் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது. நாட்டின் லடாக் பகுதிக்குள் குடியேறி சுமார் 4000 சதுர கிலோ மீட்டர் அளவு ஆக்கிரமித்துள்ள சீனா மீது நாம் போர் தொடுக்கவில்லை.
மனிதத்தையே மாய்க்கும் மதவெறி பேச்சாலோ, பாகிஸ்தானுக்கு எதிரான போர்ப் பிரகடனத்தாலோ வளமான இந்தியாவை உருவாக்க முடியாது. மாவீரன் ஹேமந்த் கர்க்கரே, அசோக் சவான் போன்ற நேர்மையான காவல்துறை அதிகாரிகளை இழந்த பின்னரே அஜ்மல் கசாப் போன்ற தறுதலைகளை நம்மால் ஒழிக்க முடிந்தது. கடந்த 2008இல் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்ததைப் போல அல்லாமல், பெஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை இந்திய மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். உயிரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோருகிறோம்.
இவண்
வழக்கறிஞர் எம்.என். அகமது சாகிபு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
நாள் : 30-04-2025
Thol.Thirumavalavan
#VCK_SOCIAL_MEDIA
#VCK
https://www.facebook.com/share/164Gy8RPRe/