ஒரே நாடு..! ஒரே பிராடு..!! தவறிழைத்து தடுமாறும் தேர்தல் ஆணையம்..!!

ஒரே நாடு..! ஒரே பிராடு..!! தவறிழைத்து தடுமாறும் தேர்தல் ஆணையம்..!!

ஒரே நாடு..! ஒரே பிராடு..!!
தவறிழைத்து தடுமாறும் தேர்தல் ஆணையம்..!!

-வழக்கறிஞர் M.N.அகமது சாகிபு (விசிக)

========================

ஹரியானா மாநிலம் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி நடந்துள்ளதை திரு ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு வாயிலாக நாட்டு மக்களுக்கு வெளியிட்டார். கர்நாடகம், மஹாராஷ்டிரம், பீகார் மாநிலங்களைத் தொடர்ந்து ஹர்யானா மாநிலத்திலும் வாக்கு முறைகேடுகள் நடந்துள்ளதை பல ஆதாரங்கள் மூலம் அவர் நிரூபித்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு தேர்தல் ஆணையம் அம்பலப்பட்டு நிற்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளார். இந்த லச்சனத்தில்தான் இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடங்கியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தையே பந்தாடி வருவதை நாடே அறியும். கால்பந்தாட்டத்திற்கு பிரேசில் நாடு உலகளவில் பெயர் பெற்றது. பிரேசிலைச் சார்ந்த மாடல் அழகி லரிசா பொனாசியின் படம் ஹரியானா வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. பேரசிலின் ஆவி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகுந்து விட்டது போலும். பிரேசில் நாட்டோடு நல்லுறவை இப்படியா பேணுவது?

இது பிரேசில் நாட்டோடு நிற்குமா? அல்லது அர்ஜென்டினா, ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல் நாடுகளின் கல்பந்தாட்ட அணிகளுக்கும் இந்தியாவில் ரசிகர்கள் இருப்பதினால் அவர்களுக்கும் வாக்குரிமை கொடுக்கப்படுமா? இதுதான் பலருடைய கேள்வி. கால்பந்து ரசிகர்களுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் ஆதரவு என்றால், கிரிக்கெட் ரசிகர்கள் நீதி கேட்டு முறையிடுவதும் நியாயம்தானே. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கும் நம் நாட்டில் ரசிகர்கள் உண்டு. மேற்படி நாடுகளின் மாடல் அழகிகளையும் நம் வாக்காளர் பட்டியலில் சேர்த்து வண்ணமய மாக்கியனால் என்ன கெட்டுவிடப் போகிறது? ஹரியானாவில் ஒரே வீட்டில் 501 வாக்குகள் இருப்பதைப் போல, தேர்தல் ஆணையம் இதையும் பரிசீலனை செய்யும் என்றே எதிர் பார்க்கிறோம்.

கடந்த 2024 ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சூழ்ச்சி மூலம் திருடப்பட்டது என்பதே ராகுல்காந்தியின் பிரதான குற்றச்சாட்டு. சுமார் 25 லட்சம் போலி வாக்காளர்கள் ஹர்யானாவின் வாக்காளர் பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளனர். இது மொத்தமுள்ள 2 கோடி ஹர்யானா வாக்காளர்களில் 12.5 சதவிகிதம் ஆகும். காங்கிரஸ் சுமார் எட்டு தொகுதிகளில் சுமார் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. மொத்தம் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க இயலாமல் போனது. தேர்தல் ஆணையத்தின் துணைகொண்டு, போலி வாக்குகள் மூலம்தான் பாஜக ஹர்யானாவின் ஆட்சியைக் கைப்பற்றியது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 3.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்றும், பீகார் தேர்தலிலும் இதே போன்ற முறைகேடுகள் நடக்கும் என்றும் ராகுல் காந்தி கூறுகிறார்.
அதை உண்மைபடுத்தும் வகையில் பீஹார் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போதே, முதல்வரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 10 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 10 ஆயிரம் வீதம் பணம் செலுத்தப்பட்டது. அதாவது, பீஹாரில் வாக்குகளை வாங்குவதற்காக பாஜக சுமார் 700 கோடி வரிப்பணத்தை செலவழித்துள்ளது. தேர்தல் ஆணையம் வழக்கம்போல இதை கண்டுகொள்ள வில்லை.

ஒரு காலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எவ்வாறு செயல்பட்டது? காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கைத் தன்மை கட்டிக் காக்கப்பட்டது. பிரதமர்கள் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் ஆட்சிகளில் இந்திய தேர்தல் வரலாற்றில் தூய்மை, வெளிப்படைத் தன்மை, தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. புகைப்பட அடையாளத்தோடு கூடிய வாக்காளர் பட்டியல், ஆன்லைன் சேவைகள் என நவீன ஜனநாயக மாற்றம் நாடளவில் உருவாக்கப் பட்டது.

1988,1989 ஆண்டுகளில், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. Representation of the People Act, 1951 மற்றும் Registration of Electors Rules, 1960 திருத்தப்பட்டது. அதன் காரணமாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) முறைமைக்கு சட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. இது போலி வாக்குகள், அடையாள மோசடிகள் தவிர்க்கும் நோக்கில் இந்திய தேர்தல் வரலாற்றில் மிகப் பெரிய முன்னேற்றம் எனலாம்.

அதன் பிறகு 1993 ஆம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் EPIC (Voter ID) புகைப்பட அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நாடளவில் வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பெரிய முயற்சியாக கருதப்பட்டது.

பிறகு 1998–1999 ஆண்டுகளில் ஐ.கே குஜ்ரால் மற்றும் வாஜ்பாய் ஆட்சி காலங்களில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) சோதனை அடிப்படையில் அறிமுகப் படுத்தப்பட்டது. தேர்தல் முடிவுகளை விரைவாக அறிவிக்க முடியும் என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1998-ல் பல மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது.

பிறகு 2004 ஆண்டில் மீண்டும் பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் 100% மின்வாக்குப் பதிவு நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டது. இந்தியா உலகின் முதல் முழுமையாக மின்வாக்கு பயன்படுத்தும் நாடாக பெருமை கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சி அதை முன்னேற்றம் என்ற அடிப்படையில் மட்டும் அனுகியது. மின்னணு வாக்கு இயந்திரத்திற்குப் பின்னால் இருந்த பாசிச சூழ்ச்சியை காங்கிரஸ் உணரத் தவறிவிட்டது.

2009இல் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், தேர்தல் ஆணையத்தின் பணி ‘தேர்தல் நடத்துவது மட்டுமல்ல அது நாட்டின் ஜனநாயகத்தை கட்டமைப்பது என்ற புதிய பரிமாணத்தை உருவாக்கினார். SVEEP திட்டம் Systematic Voters’ Education & Electoral Participation எனும் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பதிவுக்கான தேசியத் திட்டத்தை தந்தார். இதன் காரணமாக நாட்டில் வாக்காளர் பதிவு உயர்ந்தது. தேர்தல்களில் இளைஞர்கள், பெண்களின் பங்கேற்பை அது ஊக்குவித்தது.

2010, 2011 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் மாநிலங்கள் வாரியாக இணையதளங்களில் தேடல்முறை வடிவில் வெளியிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்க முடிந்தது. இது பின்னர் NVSP-க்கு அடித்தளமானது.

2013 இல் VVPAT (Verified Voter Paper Audit Trail) திட்டத்தை அறிமுகப் படுத்தியதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். அன்று சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் வி.வி.பி.ஏ.டி முறை அறிமுகம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. அதன் காரணமாக நாகாலாந்து, மிசோரம், டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் வி.வி.பி.ஏ.டி முறை சோதனை செய்யப்பட்டது. இது மின்னணு வாக்குமுறையின் நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் முயற்சியாகக் கருதப்பட்டது.

2013, 2014 ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில், NVSP திட்டம் (National Voter Service Portal) உறுவாக்கப்பட்டது. வாக்காளர் சேவைகளை ஒருங்கிணைக்கும் தேசிய ஆன்லைன் திட்டத்தின் மூலம் வாக்காளர் பெயர் பதிவு, பெயர் திருத்தம், புகார், வாக்காளர் பதிவு தேடல் போன்ற அனைத்தும் ஒரே தளத்தில் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு காங்கிரஸ் ஆட்சி காலங்களில், தேர்தல் ஆணையம் ஒருங்கிணைந்த வாக்காளர் சேவைக்கு e-Governance அடித்தளம் இட்டது.

இப்படி தூரநோக்குப் பார்வையுடன் செயல்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் இன்றைய நிலை என்ன? 2014இல் பாஜகவின் மோடி சர்க்கார் பதவியேற்றது முதல் தற்போதுவரை உள்ள 11 ஆண்டுகளில், இந்திய தேர்தல் ஆணையம் தவறிழைத்து தடுமாறுகிறது. அநீதமான பல செயல்பாடுகளால் அதன் நம்பகத்தன்மை சீர்குலைந்து விட்டது. தற்போது தேர்தல் மோசடிகள் செய்து, வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ள விவகாரம் நாட்டு மக்களிடம் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தி விட்டது. தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு சுயாட்சி அமைப்பு என்ற நிலையை பாஜக மாற்றி விட்டது.

கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல புகார்கள் அளிக்கப்பட்டன. அவற்றை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம், மோடியும், அமித்ஷாவும் பரிசுத்தவான்கள் என கிளீன் சிட் சான்றிதழ் அளித்தது. மோடி விசாரிக்கப்படாமல் விடுவிப்பதை தேர்தல் ஆணையர் அசோக் லவாசா எதிர்த்தார். ஆனால் அவரது கருத்து புறக்கணிக்கப்பட்டது. பின்னர் லவாசா பழிவாங்கப்பட்டு, வெளிநாட்டு பதவிக்கு மாற்றப்பட்டார்.

2019 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 50% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தன. ஆனால் தேர்தல் ஆணையம் அதை மறுத்தது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 5 வாக்குச் சாவடிகள் மட்டும் சரிபார்ப்பு என தீர்மானித்தது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தல்களின் போது அசாம், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக நிர்வாகிகளின் வாகனங்களில் வாக்கு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இவை காப்புப்பிரதி (ரிசர்வ்) ஈவிஎம்கள் என தேர்தல் ஆணையம் சப்பைகட்டு கட்டியது.

ஈ.வி.எம் வடிவமைப்பு மற்றும் ஆய்வில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போனது. ஈ.வி.எம்களின் சாப்ட்வேர், அதன் உற்பத்தி தகவல்களை, தகவல் பெரும் உரிமைச் சட்டம் வழியாக கோரப்பட்டபோது அவை’தேசிய பாதுகாப்பு குறித்த அம்சங்கள் எனக் கூறி தேர்தல் ஆணையம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல்களின் அறிவிப்புகளை தாமதமாக அறிவித்தது. பாஜக அரசின் திட்டங்கள், அறிவிப்புகளை வெளியிட அனுமதியும் அளித்தது. இவ்வாறு தாமதமாக அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி அறிவிப்பு பாஜக ஆட்சி அமைந்திட சாதகமாக்கியது.

2019 ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத்’மோடிஜியின் சேனா என்று தொடங்கி தலித், இஸ்லாமியர், கிருஸ்துவர்கள் மீதான வெறுப்புப் பேச்சுகளை தொடர்ச்சியாக உமிழ்ந்தார். அதற்கும் தேர்தல் ஆணையம் மென்மையான எச்சரிக்கை மட்டுமே வழங்கியது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களின் போது பெரிய கூட்டங்களுக்கு அனுமதி அளித்தது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை ஏற்படுத்தியதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று நீதிமன்றங்கள் கூறும் அளவுக்கு நிலைமை மோசமானது. தங்களுக்கு எதிரான அந்தக் கருத்தை நீக்கக் கோரி தேர்தல் ஆணையம் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

நாடு முழவதும் உள்ள பல IAS,IPS அதிகாரிகள் ஒன்றிய ஆட்சிக்கு எதிராக இருந்ததால் மாற்றப்பட்டனர். மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாஜக சார்பு அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட சில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் அவர்களுக்கு பாஜகவிலும், ஒன்றிய ஆட்சியிலும் முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த 2020 முதல் 2023 வரையுள்ள காலகட்டங்களில் நாடளவில் நடைபெற்ற இந்த முறைகேட்டை தேசிய ஊடகங்கள் விமர்சித்தன. மேற்படி அதிகாரிகளின் ஓய்வுக்குப் பிறகு வழங்கப்பட்ட பதவிகள் இந்திய சுயாட்சி மீதான தாக்குதலாக கருதின. இந்தியாவின் மேனாள் தலைமை தேர்தல் ஆணையர்களாக பணியாற்றிய டி.என். சேஷன், குரேஷி, அசோக் லவாசா உள்ளிட்டோரும் இக்கருத்தையே வழிமொழிந்தனர்.

பீகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியதைப் போல மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, தில்லி, ஹர்யானா உள்ளிட்ட மாநிலங்களிலும்; பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தின் முழு ஒத்துழைப்போடு நாடளவில் ஒரே நாடு! ஒரே பிராடு! என்ற ரீதியில் ஓட்டு திருட்டுகள் நடைபெற்றுள்ளது தற்போது அம்பலமாகி விட்டது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் முழு வீச்சில் நடைபெறுகிறது. எந்தெந்த ஆவணங்களை எப்படி கொடுப்பது? என தமிழக மக்கள் குழப்பத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளக்கப் பட்டுள்ளனர். திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் உள்ளது.

எஸ்.ஐ.ஆர் மூலம் கோரப்படும் ஆவணங்களை நாம் ஆய்வு செய்யும்போது, அது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு மறைமுகமாக அமல்படுத்துவதாக நாம் உணர்கிறோம். இவ்வாறு தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணி நிறைவு பெற்றபின் எத்தனை லட்சம் தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போகிறார்கள்? எந்தெந்த நாடுகளின் மாடல் அழகிகள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறப் போகிறார்கள்? என்பதை நாமும் பார்ப்பதற்கு தயாராகவே இருக்கிறோம்.

Ahamed Sahib
தேசியக்குழு உறுப்பினர்,
அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கம்

@highlight
Thol.Thirumavalavan
M. K. Stalin Jawahirullah

https://www.facebook.com/share/p/163HZF4UQQ/

JNU தேர்தலில் இடதுசாரி கூட்டமைப்பு மாபெரும் வெற்றி..!!

இது பாசிச பாஜகவின் ஆதிக்கத்துக்கு எதிரான பதிலடி..!!

http://tamildhisai.com/news-details.php?nid=122

Post Your Comment

EMPOWER CHANGE, IGNITE PROGRESS JOIN THE VCK PARTY

With extensive experience serving as an active member of the VCK Party, General Secretary of the Socio Justice Council, and National GB Member of the Indian Journalist Union (IJU), Sahib has been a driving force behind numerous welfare programs and initiatives that uplift lives and promote equality. Join us in building a brighter, more inclusive future.

Copyrights © 2025 Sahib Talks | All Rights Reserved | Powered By : Jellysoft