இன்றைய தேவை கார்ப்பரேட் கரன்சிகளில் கரையாத ஊடக தர்மம்..!!
இன்றைய தேவை
கார்ப்பரேட் கரன்சிகளில் கரையாத ஊடக தர்மம்..!!
நாங்கள் குடிக்கும் குடிநீரில் மலத்தைக் கலந்து விட்டார்கள் பாவிகள்! என்று அங்கலாய்த்துக் கொண்டு புகார் அளித்தனர் வேங்கை வயலின் பட்டியலின மக்கள். இறுதியில் அவர்களையே குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறையின் புலனாய்வு விசாரணை. தமிழ்நாட்டை உலுக்கிய இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களையும், சமூக ஆர்வலர்களையும் கூட வேங்கைவயல் கிராமத்துக்குள் அரசு அனுமதிக்க வில்லை.
இது ஒருபுறம் எனில், மறுபுறம் நாடளவில் பேசு பொருளாகிய சனாதனம் குறித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் ஒரேயடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நீதி பரிபாலனம் குறித்த மேற்படி இரு சம்பவங்களையும் பிரதான செய்தி ஊடகங்கள் ஆய்வுக் கோணத்தில் அணுகியதா? என்றால் இல்லை. மாறாக தந்தை பெரியாரை விமர்சித்த சீமானின் பேச்சுக்களைத்தான் செய்தி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் உள்வாங்கி வெளிப்படுத்துகின்றன. பெரியாரை போஸ்ட் மார்ட்டம் செய்து திராவிடத்தை திட்டித் தீர்ப்பதால் தமிழ் சமூகத்திற்கு எத்தகைய பலன்களும் ஏற்படப் போவதில்லை. அது ஆரிய சங்பரிவார சித்தாந்த வளர்ச்சிக்கே பயன்படும். அதனால்தான் பாஜகவின் ஹெச்.ராஜாவும், அண்ணாமலையும் சீமானை பாராட்டுகிறார்கள். சீமான் விவகாரத்தில் கவனம் செலுத்துவதால் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய முக்கிய செய்திகள் சென்றடையாமல் போய்விடுகின்றன. இதில் ஒரு சில ஊடகங்களும், ஒரு சில பத்திரிக்கைகளும்தான் விதிவிலக்கு.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் விவாதப் பொருளான ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது நினைவு இருக்கலாம். முஸ்லிம்களின் வக்பு சொத்துக்களையும், வக்பு சட்டத்தையும் கேள்விக் குறியாக்கும் அம்சங்களைக் குறித்து எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகளை, நாடாளுமன்ற கூட்டுக்குழு தற்போது நிராகரித்துள்ளது. இதுகுறித்து ஊடக தர்மத்தில் நின்று எத்தனை செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன?
கலாச்சார பன்முகத்தன்மை கொண்டு பல்சமய சமூகங்கள் வாழும் இந்தியத் திருநாட்டில், இந்திய மக்களாகிய நாம் அனைவரும் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஆகிய விவகாரங்களில் அவரவர் மதக்கோட்பாடுகளுக்கு உட்பட்ட தனிச் சட்டங்களை பின்பற்றிக் கொள்ளலாம். இது மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டம் நமக்குத் தந்த உரிமையாகும். இதை மாற்றி அமைத்து பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும், நாடு முழுவதும் ஒரே நாடு..!! ஒரே சட்டம்..!! என்று பின்பற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நீண்ட காலத் திட்டம்.
இத்திட்டத்தை முதன்முதலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைதியான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. குஜராத் மாடலைப் போல தற்போதைய உத்தரகாண்ட் மாடலால் நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஏற்படப்போகும் பேராபத்தை விளக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் இச்செய்தி பெரிய அளவில் விவாதப் பொருளாக்கப் படவில்லை.
துக்ளக் இதழின் 55-வது ஆண்டு விழாவில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் திரு.குருமூர்த்தி அவர்கள் பெரியாரை விமர்சித்ததற்காக சீமானை பாராட்டினார். அம்பேத்கர் அவர்கள் ஹிந்து தர்ம எதிர்ப்பாளர் என்பது பொய். மாறாக அம்பேத்கரும், வள்ளலாரும், திருவள்ளுவரும் சனாதன இந்து தர்மத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார். மேலும் சனாதனம் பற்றி விசிக தலைவர் எழுச்சித் தமிழரோடு விவாதிக்க தான் தயார் என்றும் சவால் விடுத்தார். நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அதிமுக்கியமான சவால் அல்லவா இது?. குறிப்பாக நாட்டில் அதிகரித்து வரும் போதை புழக்கத்திற்கு காரணம் அதை கடத்தும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அப்பட்டமான ஒரு பொய்யை துணிந்து சொன்னார். ஒரு மூத்த பத்திரிக்கையாளரான குருமூர்த்தி அவர்களே இப்படி பொறுப்பற்று பேசினால் எப்படி? என்று அவரை அறிந்தோர் யாரும் கருதவில்லை. காரணம் இஸ்லாமிய மார்க்கம் போதைக்கும், தீவிரவாதத்திற்கும் எதிரானது என்று தெரிந்த நிலையில்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்.
76-வது குடியரசு தினத்தன்று அரசியலமைப்புச் சட்டத்தின் அவசியத்தை பற்றியும், தமிழ்நாட்டின் ஓராண்டு வளர்ச்சிகள் குறித்தும் உரையாற்ற வேண்டிய ஆளுநர் ரவி அவர்கள், கல்வி, பொருளாதாரம், உற்பத்தி, வளர்ச்சி அனைத்திலும் தமிழகம் பின்தங்கி உள்ளதாகக் கூறினார். தமிழ்நாட்டில் சமூக நீதியே இல்லை என்றும், பட்டியலின மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்றும் விமர்ச்சித்தார். திரு.குருமூர்த்தியைப் போன்ற துணிச்சலோடும், அறிவிக்கப்படாத அரசியல்வாதியாகவும் செயல்படும் ஆளுநர் அவர்களின் உரையின் பிண்ணனியை தமிழக பொது மக்களுக்கு எத்தனை செய்தி ஊடகங்கள் தெளிவாக எடுத்துச் சொல்லின?
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தும், சமீபத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ குறித்தும் கவலையை தெரிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு, பல மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் நம் நாட்டு மணிப்பூருக்குச் செல்ல நேரமில்லை.
காஸா மீது சுமார் 15 மாதங்களாக குண்டு மழை பொழிந்து, 1,80,000 கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கி, 50,000 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை ஊனமாக்கி, 20 லட்சம் மக்களை இடம்பெயரச் செய்த இஸ்ரேல் நடத்திய போர் என்ற படுகொலை முடிவுக்கு வந்தது. சல்லடையாய் துளைக்கப்பட்ட காசா நகரில், இஸ்ரேலிய பணையக் கைதிகளின் கற்பையும், உயிரையும் பாதுகாத்து பத்திரமாய் ஒப்படைத்தனர் ஹமாஸ் போராளிகள். தன் மண்ணைப் பாதுகாக்க, தன் மக்கள் உரிமையை மீட்டெடுக்க களத்தில் நிற்கும் இவர்களுக்கு குருமூர்த்திகள் வைத்த பெயர் இஸ்லாமியத் தீவிரவாதிகள். இதைத் தெளிவுபடுத்துவதும் பத்திரிக்கையாளர்களின் கடமைதானே! ஊடக தர்மம்தானே!
மதுரை மண்ணை மாசுபடுத்தி, கனிம வளங்களை கபளீகரம் செய்வதே டங்ஸ்டன் சுரங்கத் திட்டம். வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை மீட்டெடுக்க மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் அவசியமாகி விட்டது. பிறகு அது அரசியலும் ஆகிவிட்டது. கார்ப்பரேட் திட்டங்கள் மற்றும் கனிம வளக் கொள்ளையை எதிர்த்து கருத்துச் சொல்வோருக்கு புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜாபர்அலியின் சமீபத்திய படுகொலைதான் கண்களுக்குத் தெரிகிறது. கார்ப்பரேட்டுகளின் கரன்சிகளுக்கு அடிபணியாமல் தோழர் ஜாபர்அலிக்கு நீதி கேட்பதும் ஊடக தர்மம்தான்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சுமார் ரூ.9,250 கோடி மதிப்பீட்டில் 1301 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கும் பணி கார்ப்பரேட்டுகளின் தயவோடு அதிதீவிரமாக நடந்து வருகிறது. அதற்காக நிலக்கரி இறங்குதளம் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் சுமார் 8 கி.மீ அளவில் அதற்கான பாலங்கள், கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன. இதனால் அமலிநகர், திருச்செந்தூர் வட்டார கடற்கரை மீனவ கிராமங்களில் பெரும் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியிலுள்ள கடல் சீற்றம் கொண்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலைச் சுற்றியுள்ள கடற்கரையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போது, துறை சார்ந்த அனுபவமிக்க வல்லுனர்களின் ஆலோசனையோடு, பொதுமக்களுடைய கருத்துக்களையும் கேட்டறிவதுதான் அரசின் கடமை. மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி, நிலம், நீர், காற்று, கடல் என அனைத்தையும் மாசுபடுத்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தும் இது போன்ற திட்டங்கள் தேவைதானா? என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்பாதிப்புகளை ஆளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் செய்தி ஊடகங்களின் தார்மீகக் கடமையாகும். எனவே கார்ப்பரேட் கரன்சிகளில் கரையாத ஊடக தர்மம்தான் இன்றைய இந்தியாவின் அவசியத் தேவை ஆகும்.
ஆக்கம் : வழக்கறிஞர் அகமது சாகிபு
தேசியக் குழு உறுப்பினர்
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ)
Click Here to View PDF3 Pages-1